கனவுக்காதலி

|















அல்லிப் பூக்கள் அவிழும்
மழை நாள் நிலவும் உருகும்
கற்பை திருடும் காற்றே
கொஞ்சம் வா
என் காதலி(ன்) வாசம்
உன் கைகளில் நுகர்வேன்
கவிதையால் முகர்வேன்
மஞ்சம் தா


நட்சத்திரப் பூக்கள்
உதிரும் நேரம்
என் வேட்கை பெருகும்; தாபம்
சொல் உடையும் வேகம்
உனைச் சுகிக்க தோன்றும் தூரம்
செவ்விதழ் தேன் கூட்டில்
நறவெடுக்க வேண்டுமடி
காற்று பெண்ணே
கொஞ்சம் வா
உனை போர்த்திக்கொள்ள
இடம் தா.....

சில் வண்டு இரண்டோ
புல் மறைவில் சிணுங்கும்

நாணல் புகலிடத்தில்
துணை கூடி
நுணல் கிறங்கும்

தூங்க மறந்த ஆந்தை இரண்டு
இறக்கை மறைவில்
உலகை மறக்கும்

காற்றே நீ தூரம்
மாறாதோ என் தாகம்
நான் காதல் குடிக்கும் சிம்மம்
என் தினவு தணிக்க நீ வேண்டும்
கற்பனைப் பெண்ணே
கொஞ்சம் வா............!!!